ஜாதி அல்லது குலம் சம்பந்தபட்ட பிரச்சனைகள் தீர இன்னும் பல தலைமுறை கடந்தாக வேண்டும் என தோன்றுகிறது.
என் 21 வயது வரை ஜாதி என்பதை பற்றி பெரிய அக்கறையோ அல்லது முக்கியத்துவமோ நான் கொடுத்தது இல்லை.
21 வயதில் அரசு வேலையில் சேர்ந்த பின்பு தான், எனக்கு சமூக கட்டமைப்பு மற்றும் அதன் சூட்சுமங்கள் பிடிபட ஆரம்பித்தது.
ஒவ்வொரு சிறு விஷயங்களிலும், என் குலம், என் ஜாதி, என் மதம் என ஒவ்வொருவரும் வெறித்தனமாக சுயநலமாக சிந்திக்க மட்டுமே செய்தார்களே தவிர ஒற்றுமையாக ஒரு விஷயத்தை கூட முழுமையாக செய்தது இல்லை.
பல வருட அரசு பணிக்குப்பின் தகவல் தொழில்நுட்ப பணியில் சேர்ந்த பின் மறுபடி இதைபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்த போது, வெறுத்து பொய் ஒதுங்கி இருக்கத்தான் முடிந்தது.
சமீபத்தில் ஒரு நண்பனின் திருமணத்திற்கு சேலம் சென்றிருந்த போது, திருமணம் முடிந்து மறு வீடு செல்லும் சடங்கில் ஒரு தாழ்த்தப்பட்ட முதியவர் தன மேல்துண்டை விரித்து மணமக்களின் பாதணிகளை அதில் வைத்து விழுந்து கும்பிட்டதை பார்த்து என்னை அறியாமல் என் உடல் நடுங்க தொடங்கியது, ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்ட அந்த சம்பவம் பல மாதங்கள் ஆகியும் என் மனதை விட்டு நீங்கவில்லை, ஒரு நொடியில் அதை தடுத்திருக்க முடியுமே, ஏன் அதை செய்யமால் பேடித்தனமாய் நின்றிருந்ததை எண்ணி வெட்கப்படுவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
இதற்க்கு முன்பும் சக மனிதனின் ஜாதியை கேட்டு அதனை வைத்து அவர்களை மதிப்பிடும் பலரை பார்த்திருந்தாலும், அவர்களை ஒதுக்கி வைப்பதை தவிர, உருப்படியாக எதையும் செய்தது இல்லை.
எப்படி யோசித்து பார்த்தாலும், ஜாதி என்பது முன்பொரு காலத்தில் அவரவர் செய்த தொழிலை வைத்து வகைபடுத்தபட்டதுதானே தவிர, எந்த தொழிலும் உயர்ந்தது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லையே என்றுதான் தோன்றுகிறது.
கடவுளின் கருவறையில் கலவி மேற்கொண்ட இழிந்தவன் உயர்ந்த ஜாதியா? ஆத்மா சுத்தியோடு தன் உடல் உழைப்பில் வாழும் அடித்தட்டு மக்களின் ஜாதி தாழ்ந்ததா? இந்த மாற்றம் இந்த தலை முறையில் மட்டும் அல்ல, இன்னும் பல தலைமுறைகளுக்கு பிறகுதான் மாறும் என்பது மட்டும் நிதர்சனமாக தெரிகிறது.
ஊர் முழுக்க பாதையை செப்பனிடுவதை விட, என் பாதங்களை பாதுகாத்துகொள்வது முக்கியம் என நினைக்கிறேன். முதலில் என் குடும்பத்தை இந்த இழிவில் இருந்து மீட்பது முக்கியம் என நினைக்கிறேன்.
No comments:
Post a Comment